அதிபத்த நாயனார்

0

அதிபத்த நாயனார்




சோழ நாட்டிலே காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் இரு பெரும் நகரங்களாக விளங்கின. அந்நகரங்களில் கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற இடம் அமைந்திருந்தது.இந்நகரில் வலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மீன் வியாபாரம் செய்து வந்ததோடு சங்கு, பவழம் போன்ற பொருள்களையும் விற்பனை செய்து வந்தனர்.ஆழ்கடலுள் சென்று மீன் பிடித்ததுவரும் அதிபத்தர் முதல் மீனை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டு விடுவதைத் தலைசிறந்த இறை நியதியாகக் கொண்டிருந்தார்.எல்லையில்லாப் பக்தி காரணமாகத்தான் அதிபத்த நாயனார் இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்தார்.இவருடைய அன்பிற்குக் கட்டுப்பட்ட எம்பெருமான் இவரது புகழை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார். முன்பெல்லாம் ஏராளமான மீன் பிடித்த நாயனாருக்கு இப்பொழுதெல்லாம் எவ்வளவு தான் வலை வீசிய போதும் ஒரே ஒரு மீனுக்கு மேல் கிடைப்பதில்லை. அந்த மீனையும் இறைவனுக்கு என்றே கடலுக்குள் வீசி விட்டு வெறுங்கையோடு வீட்டிற்குத் திரும்புவார். 

இதனால் இவரது வியாபாரம் தடைப்பட்டது. இதுகாறும் சேர்த்து வைத்திருந்த செல்வம் சிறுகச் சிறுகக் குறையத் தொடங்கியது.ஒருநாள் அதிபத்த நாயனார் வலை வீசிய போது அவரது வலையில் விசித்திரமான ஒரு மீன் கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அபபொன் மீன் நவமணி இழைத்த செதில்களைப் பெற்றிருந்தது. வலைஞர்கள் அதிபத்தரிடம் இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள். அதிபத்தர் அவர்களது வார்த்தைகளுக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை.எம்பெருமானுக்கு அளிக்கப் பொன் மீன் கிடைத்ததே என்ற மட்டில்லா மகிழ்ச்சியோடு இறைவனை நினைத்தவாறு அப்பொன் மீனைக் கடலிலே தூக்கி எறிந்தார்.அதிபத்தரது பக்தியின் திறத்தினைக் கண்டு அனைவரும் வியந்து நின்றனர். வானத்திலே பேரொளி பிறந்தது.இறைவன் உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். சிவபுரியிலே தமது திருவடி நீழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார் எம்பெருமான்.

குருபூஜை


அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top