முழு நீறு பூசிய முனிவர்

0

முழு நீறு பூசிய முனிவர்




எம்பெருமானுடைய அடியார்கள் திருமேனியல் அணி செய்யும் சிவச் சின்னங்கள் திருவெண்ணீரும் உருத்திராட்சமும் ஆகும். திருநீறு கற்பகம், அநுகற்பகம், உபகற்பகம் என்று மூன்று வகைப்படும். இம் மூன்று வகையான திருநீற்றையும் அணிவதினால் பிறவிப் பிணியைப் போக்கி நலம் பெற மார்க்கம் ஏற்படுகிறது! நோயின்றிக் கன்றையுடைய பசுவின் சாணத்தைப் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபித்து ஏற்று பஞ்சகவ்யம் விட்டுப் பிசைந்து உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று சிவமந்திரத்தால் வேள்விகள் நடத்தி நெருப்பில் இடவேண்டும். கொழுந்து விட்டு எரியும் ஓமத்தீயில் சாணம் வெள்ளைப் பொடியாக - நீராக எரிந்து விடுகின்றது. இத்திருநீற்றை சிவபெருமானார் திருவடிகளை வாழ்த்தி வணங்கி, பயபக்தியுடன் எடுத்தல் வேண்டும். இத்தகைய திருவெண்ணீறு கற்பகம் என உரைக்கப்படும். 

காட்டிலே உலர்ந்து கிடக்கும் பசுவின் சாணத்தைப் பொடி செய்து, ஆவின் நீரை ஊற்றி, நன்றாக பிசைந்து உலர்த்த வேண்டும். திருஓமம் வளர்த்து, கொழுந்து விட்டு எரியும் ஓமத்தீயில் இட்டு எரிக்க வேண்டும். இத்திருவெண்ணீறு அநுகற்பகம்.

பசுக்கள் மேயும் காட்டில் மரங்கள் பற்றி எரிந்து அதனால் உண்டான நீரும், பசுக்கள் கட்டி வைத்த இடங்களில் தீப்பற்றி வெந்துபோன நீரும், செங்கல்சுட்ட காளவாயிலில் உண்டான நீரும், ஆகிய இவற்றைத் தனித்தனியே பசுவின் நீரினால் நன்றாகப் பிசைந்து உலர்த்த வேண்டும். அவற்றைத் திருமந்திரம் ஓதி உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட உருண்டைகளை மடங்களில் உள்ள சிவாக்கினியில் இட்டு வேக வைத்தல் வேண்டும். இப்படித் தீயில் இட்டு எடுத்த திருநீறு உபகற்பம் ஆகும். 

இந்தப்படி அல்லாது அகற்பம். இவற்றுள் எந்த வெண்ணீற்றையாயினும் உடல் முழுவதும் பூசிக் கொள்ளலாம். ஆனால் திருநீற்றை பூசிக்கொள்வதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதைத் தட்டாமல் கடைப்பிடித்தல் வேண்டும். தூய்மையில்லாத இடங்களில் நடக்கும்போது திருநீறு அணியவே கூடாது. திருநீற்றை அணியும்போது அவற்றைக் கீழே சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு முழுநீறு பூசிய முனிவர்களைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் தொகையடியார்களில் ஒருவராக்கி சிறப்பித்துப் பாடி உள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top