நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

0

நீலகண்ட யாழ்ப்பாண நாயனார்





சோழவள நாட்டிலே அமைந்துள்ள எருக்கத்தம் புலியூர் என்னும் நகரில் ஓர் பெரிய சிவன் கோவில் உண்டு. அக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு, நீலகண்டேசுவரர் என்றும், சக்திக்கு நீலமார்க் கண்ணம்மை என்றும் பெயர். தலவிருட்சம் வெள்ளெருக்கு. இத்தகைய தெய்வ வளமிக்க நகரில், பாணர் மரபில் பிறந்தவர் நீலகண்ட யாழ்ப்பாணர். இவரது மனைவி மதங்க சூளாமணி. இசையே உருவெடுத்த பாணரும், அவரது வாழ்க்கைத் துணைவியாரும், நீலகண்டேசுவரர் புகழை யாழில் இனிமையுடன் உள்ளம் உருக இசைத்து எல்லையில்லா இன்பம் எய்தினர். 

இவர்கள் சிவத்தலங்கள் தோறும் சென்று யாழ் இசைத்து எம்பெருமான் அருள் பெற்று பெருமையுற்றனர். சோழவள நாட்டிலுள்ள எல்லா சிவன் கோவில்களையும் கண்டுகளித்துப் பேரின்பம் பூண்ட பாணரும் அவரது மனைவியாரும் மதுரையம்பதிக்குச் சென்றனர். பாணர் தம் மனைவியோடு திரு ஆலவாய் அண்ணலாரது ஆலயத்தின் புறத்தே நின்று எம்பெருமானின் புகழை யாழில் சுருதிகூட்டி பண்ணமைத்துப் பாடிக் கொண்டிருந்தார். பண்டை நாட்களில், பாணர் மரபினோர் ஆலயத்துள் சென்று இறைவனை வழிபடுவது கிடையாது. புறத்தே நின்று வழிபடுவதையே நியதியாகக் கொண்டிருந்தார்கள். பாணரின் யாழிலே உள்ளம் உருகிய சோமசுந்தரக் கடவுள் தமது பக்தனைக் காக்க திருவுள்ளம் கொண்டு மதுரையம்பதி சிவத்தொண்டர்கள் கனவில் எழுந்தருளினார். யாழ்ப்பாணரையும், அவரது மனைவியாரையும் கோவிலுள் அழைத்து வந்து தரிசனம் செய்வதற்கு ஆணையிட்டார். அவ்வாறே பாணர் கனவிலும் எழுந்தருளினார்.

பாணரே ! உம்மை, எம்மிடம் அழைத்து வந்து தரிசனம் செய்து வைக்க ஆவன செய்துள்ளோம் என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார். மறுநாள் வழக்கம்போல் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மனைவியாருடன் கோயிலின்  புறத்தே அமர்ந்து யாழ் இசைத்து தம்மை மறைந்த நிலையில் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது தொண்டர்கள் அவர்களைக் கண்டு  வணங்கி எம்பெருமானின் ஆணையைக்கூறி அவர்களை அகத்து எழுந்தருளுமாறு பணிவோடு கேட்டுக் கொண்டனர். அவர்களும் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கோயிலுக்குள் சென்று மண்டபத்தில் அமர்ந்தனர். பக்தி வெள்ளத்தில் மூழ்கிய அன்பர் இருவரும் தரை ஈரமாக இருப்பதனை கூட பொருட்படுத்தாமல், ஈரத்தரையில் அமர்ந்து மெய்மறந்து யாழை மீட்டி பாடத் தொடங்கினர். இவருடைய இன்ப இசையில் மயங்கிய மதுரையம்பதி ஈசன் தரையின் குளிர்ச்சி பட்டு யாழின் சுருதி கெட்டுவிடுமே என்று திருவுள்ளம் பற்றினார். அசரீரி வாயிலாக பெருமான் நிலத்திலிருந்து பாடினால் ஈரத்தால் யாழ் கெட்டுவிடும். எனவே அவர்கட்கு அமர்ந்து பாடப் பலகை ஒன்று இடுங்கள் என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுது அத்தொண்டர்கள் அவர்களுக்கு அழகிய பீடம் ஒன்றை எடுத்து வந்து அதன் மீது அமர்ந்து பாடுமாறு செய்தனர். பீடத்தில் அமர்ந்த யாழ்பாணரும், மதங்கசூளாமணியும் அழகிய இனிய தெய்வ சக்திமிக்கப் பக்திப் பாடல்கள் பலவற்றைப் பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தனர். அதன் பிறகு இருவரும் மதுரையம்பதியில் நெடுநாள் தங்கியிருந்து தங்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர். அடுத்துள்ள பல சிவத்தலங்களையும் தரிசித்தவாறு திருவாரூரை அடைந்தனர்.

திருவாரூர் தியாகேசப்பெருமானும், பிராட்டியாரும் பாணர் இசையில்  மயங்கினர். அன்றிரவு ஈசன் திருவாரூர் மெய்யன்பர்கள் கனவிலே எழுந்தருளி,எமது அன்பன் பாணனுக்கு திருக்கோயிலுள் வேறு வாயில் அமைத்து அதன் வழியாகக்  கோயிலுக்குள் அழைத்து வந்து இசை பாடத் துணைபுரிவீர்களாக என்று கட்டளையிட்டருளினார். மறுநாள் தொண்டர்கள் திருநீலகண்ட யாழ்ப்பாணர் எழுந்தருளும் பொருட்டு வடதிசையில் வாயில் ஒன்று நிர்மாணித்தனர். அதன் வழியாக அவரையும், அவரது மனைவியாரையும் எம்பெருமான் திருமுன் எழுந்தருளச் செய்தனர். யாழ்ப்பாணர் வீதிவிடங்கப் பெருமானைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்து பக்திப் பாடல்கள் பாடினார். சில நாட்களில் அங்கிருந்து புறப்பட்டார். சிவத்தலங்கள் பலவற்றைத் தரிசித்துக் கொண்டே, சீர்காழியை வந்தடைந்து சம்பந்தரை வணங்கினார். பாணரின் யாழிசையில் எல்லையில்லா இன்பம் எய்திய திருஞான சம்பந்தப் பெருமான் அவரையும், அவர் தம் மனைவியாரையும் தம்முடனேயே இருந்து தேவாரப் பதிகங்களை யாழில் இட்டு இசைத்து பாடும் வண்ணம் அருள்புரிந்தார். இறுதியில் திருபெருமணநல்லூரில் ஞானசம்பந்தர் திருமணத்தில் தோன்றிய சிவஜோதியில், பாணரும், அவர்தம் மனைவியாரும் கலந்து சிவபதவியை அடைந்தனர்.

 குருபூஜை


திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் குருபூஜை வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

திருநீலகண்டத்துப் பாணனார்க்கு அடியேன்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top